சபாநாயகர் அனுமதிக்காவிட்டாலும் சட்டசபைக்குள் நுழைவோம்; சாமிநாதன்


சபாநாயகர் அனுமதிக்காவிட்டாலும் சட்டசபைக்குள் நுழைவோம்; சாமிநாதன்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் அனுமதிக்காவிட்டாலும் சட்டசபைக்குள் நுழைவோம் என்று சாமிநாதன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சட்டசபை செயலாளரை சந்தித்து தங்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரித்து அதற்குரிய உரிமைகளை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.

அதன்பின் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் சில விளக்கங்களை மத்திய அரசு புதுவை அரசுக்கு அனுப்பிவைத்தது. அதன்பிறகும் அவர்களை அங்கீகரிக்க மறுத்து சட்டசபை செயலாளர் கடிதம் அனுப்பினார்.

இதுதொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும் நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு பின்னரும் சபாநாயகர் எங்களை அங்கீகரிக்க மறுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறைக்கும், எங்கள் கட்சியின் தலைமைக்கும் புகார் செய்துள்ளோம். இதுதொடர்பாக கவர்னர், தலைமை செயலாளரை சந்திக்க உள்ளோம். எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது தொடர்பாக புதுவை அரசு ஏற்கனவே அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அரசிதழை செல்லாது என்று மாநில அரசு அறிவிக்குமா? அரசாணையை மாற்ற முடியுமா?

வாரிய தலைவர்கள் விவகாரத்தில் உள்துறையின் உத்தரவினை ஏற்கும் நாராயணசாமி, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உள்துறையின் உத்தரவினை ஏற்க மறுப்பது ஏன்? சபாநாயகர் எங்களை அனுமதித்தாலும், அனுமதிக்காவிட்டாலும் வருகிற 23–ந்தேதி சட்டசபைக்குள் நாங்கள் நுழைவோம். அதனை யாராலும் தடுக்க முடியாது. சபாநாயகர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சாமிநாதன் கூறினார்.


Next Story