கடத்துவதற்காக காவிரி ஆற்றில் அள்ளி கரையில் குவிக்கப்பட்ட 20 டன் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை


கடத்துவதற்காக காவிரி ஆற்றில் அள்ளி கரையில் குவிக்கப்பட்ட 20 டன் மணல் பறிமுதல் வருவாய்த்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே கடத்துவதற்காக காவிரி ஆற்றில் அள்ளி கரையில் குவிக்கப்பட்டு இருந்த 20 டன் மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொளத்தூர்,

மேட்டூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகளான பண்ணவாடி, செட்டிப்பட்டி, அடி பாலாறு ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் மர்ம ஆசாமிகள் மணல் அள்ளி கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்த மணல் கடத்தலை தடுக்க கொளத்தூர் போலீசார் செட்டிப்பட்டி அருகே சோதனைச்சாவடி அமைத்தும், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஆனாலும், கொளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சிலர் வாகனங்களின் முகப்பு விளக்கை அணைத்துவிட்டு மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொளத்தூரை அடுத்த சவேரியார்பாளையம் என்ற இடத்தில் மணல் கடத்தி சென்ற டிராக்டர் மோதி கணவன்-மனைவி பலியானார்கள். இதையடுத்து மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திடீர் சோதனை

இந்த நிலையில் மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று செட்டிப்பட்டி காவிரி ஆற்றுப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆற்றில் இருந்து அள்ளி கடத்துவதற்காக கரையில் மணல் குவிக்கப்பட்டு இருந்தது. உடனே, அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டு இருந்த 20 டன் மணலை பறிமுதல் செய்தனர். பின்னர் மணலை டிராக்டரில் ஏற்றி பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து உதவி கலெக்டர் மேகநாத ரெட்டி கூறும்போது, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

Related Tags :
Next Story