வாய்க்கால் தண்ணீர் விவசாய நிலத்தில் புகுந்ததால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


வாய்க்கால் தண்ணீர் விவசாய நிலத்தில் புகுந்ததால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

பெருவளை வாய்க்கால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோபுரப்பட்டியில் கடந்தவாரம் பெருவளை வாய்க்காலில் வரும் தண்ணீர் வயல்களில் புகுந்ததால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக உடைப்பை சரிசெய்தனர். ஆனால் வயல்களில் புகும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்்த்துறையினரிடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அழகியமணவாளம், கோபுரப்பட்டி, அழிஞ்சிகரை, கடுக்காத்துறை, பாச்சூர் போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஒன்று திரண்டு நேற்று காலை மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் வந்தால்தான் கலைந்து செல்வோம் என்று கூறியதையடுத்து முக்கொம்பு பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் வேதரெத்தினம், மண்ணச்சநல்லூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சித்ரா, சிறுகாம்பூர் பகுதி வருவாய் ஆய்வாளர் செந்தில், அழகியமணவாளம் கிராம நிர்வாக அலுவலர் பழனியம்மாள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 2 மணிநேரம் நீடித்த இந்த முற்றுகை போராட்டத்தால் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Related Tags :
Next Story