கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி நடைபெறாத அவலம் விவசாயிகள் கவலை


கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி நடைபெறாத அவலம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த பல வருடங்களாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததாலும் மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததாலும் சாகுபடி நடைபெறவில்லை. இதனால் இந்த பகுதியில் சாகுபடி நிலங்கள் தரிசாக உள்ளன. இந்த பகுதியில் நெல்லை தவிர்த்து மாற்று பயிர் சாகுபடி செய்ய மண்வளம் உகந்ததாக இல்லை. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக கடைமடை பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 2-ந் தேதி டெல்டா மாவட்ட சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்று வரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விளைநிலங்களில் ஆடு, மாடுகள் மேயும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்த போதும் கடைமடை பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் விளங்குலம், சோலைக்காடு, கொரட்டூர், ஊமத்தநாடு போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் நிரம்பவில்லை. இப்பகுதியில் உள்ள பெரிய ஏரிகளில் தண்ணீர் இருந்தால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சாகுபடிக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்கும். இதனால் தண்ணீர் இன்றி கடைமடை விவசாயிகள் விதை நெல்லை இதுவரை கையில் எடுக்காமல் மனமுடைந்து கவலையில் உள்ளனர். நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்து மேட்டூர் அணை தண்ணீர் கிடைத்தாலும் இனிமேல் சம்பாவுக்குரிய நீண்ட கால, மத்திய கால நெல் ரகங்களை சாகுபடி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story