நாகை அருகே பரிதாபம் 2 மகன்களை கொன்று வாலிபர் தற்கொலை


நாகை அருகே பரிதாபம் 2 மகன்களை கொன்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Nov 2017 4:30 AM IST (Updated: 15 Nov 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து 2 மகன்களை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த புத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடை கோர்ட்டு உத்தரவின் படி தற்போது மூடப்பட்டுள்ளது. அந்த கடையின் மாடியில் துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கடையின் மாடியில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணமும், அதன் அருகிலேயே 4½ மற்றும் 3 வயது மதிக்கத்தக்க 2 ஆண் குழந்தைகளின் பிணமும் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்தணப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடன் அவர், நாகை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், உதவி கலெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் விழுந்தமாவடியை சேர்ந்த சிவராஜன் என்பவர் கீழையூர் போலீசில் தனது அண்ணன் தர்மராஜன் (வயது27) மற்றும் அவரது மகன்கள் தருண்(4½), ரசித்(3) ஆகியோரை காணவில்லை என புகார் கொடுத்திருந்தது தெரிய வந்தது. இதனால் இறந்து கிடப்பது தர்மராஜன் மற்றும் அவரது மகன்களாக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதை தொடர்ந்து தர்மராஜனின் உறவினர்களை அங்கு வரவழைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், இறந்து கிடப்பது தர்மராஜன் மற்றும் அவரது மகன்கள் தருண், ரசித் தான் என்று அடையாளம் காட்டினர்.

தர்மராஜனின் மனைவி கவிதாவுக்கு(25) உடல்நிலை சரியில்லாததால் அவர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன முடைந்த தர்மராஜன் தனது மகன்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனதுவீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். பின்னர் அவர் அந்த கட்டிடத்தின் மாடிக்கு சென்று தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தர்மராஜனும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக் காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, வாலிபரும் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story