மலவள்ளி அருகே குளத்தில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்பு
மலவள்ளி அருகே, குளத்தில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அந்த குழந்தை தோழியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பியது.
மண்டியா,
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கே.எம்.தொட்டி அருகே உள்ள அன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித். இவரது மகள் ரீத்தா(வயது 3). அதேப்பகுதியை சேர்ந்த சந்திரசேகரின் மகள் சந்தனா(3). ரீத்தாவும், சந்தனாவும் தோழிகள். இந்த நிலையில் நேற்று ரீத்தாவும், சந்தனாவும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று சாக்லெட் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது சந்தனா மாட்டு சாணத்தை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவள் அருகில் உள்ள குளத்திற்கு சென்று கால் கழுவி கொண்டு இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக சந்தனா குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தாள். இதனை பார்த்த ரீத்தா அங்கிருந்து ஓடி சென்று சந்திரசேகரிடம், சந்தனா குளத்தில் தவறி விழுந்ததை மழலை மொழியில் கூறினாள். ஆனால் அவருக்கு ரீத்தா சொன்னது புரியவில்லை.
இதையடுத்து ரீத்தா அங்கிருந்து தனது வீட்டிற்கு ஓடி சென்று தனது தந்தை அஜித்திடம், சந்தனா குளத்தில் தவறி விழுந்தது பற்றி கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அஜித், சந்திரசேகருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அஜித், சந்திரசேகர் கிராம மக்கள் அந்த குளத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது குளத்தில் மூழ்கி சந்தனா தத்தளித்து கொண்டு இருந்தாள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் குளத்திற்குள் குதித்து சந்தனாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். ஆனால் தண்ணீர் நிறைய குடித்ததால் சந்தனா மயங்கினாள். இதனை தொடர்ந்து சந்தனாவை, சந்திரசேகர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சந்தனாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் சந்தனா கண்விழித்தாள். அவளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாமர்த்தியமாக செயல்பட்டு சந்தனாவின் உயிரை காப்பாற்றிய ரீத்தாவை, சந்தனாவின் குடும்பத்தினரும் கிராம மக்களும் கொஞ்சி மகிழ்ந்தனர். இந்த சம்பவம் அன்னூர் கிராமத்தில் நேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.