அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் இல்லை சட்டசபையில் சித்தராமையா தகவல்
6–வது ஊதிய குழு அமலுக்கு முன்பு கர்நாடக அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் இல்லை என்று சட்டசபையில் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் மகாலிங்கப்பா கேட்ட கேள்விக்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாசமூர்த்தி தலைமையில் 6–வது ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி இந்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வருகிற ஜனவரி மாதம் 31–ந் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு கோரியது. இதையடுத்து அந்த குழுவின் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், கர்நாடக அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. புதிய ஊதிய குழுவில் இந்த சம்பள முரண்பாடு சரிசெய்யப்படும். அந்த ஊதிய குழு அறிக்கை வழங்கிய பிறகு மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதற்கிடையே ஊதிய குழு அமலுக்கு முன்பு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை. போலீசாரின் சம்பளத்தை உயர்த்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கூறியபடி போலீசாரின் சம்பளத்தில் ரூ.2,100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் சேவையாற்றினாலும் போலீசாருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை நாங்கள் போக்கியுள்ளோம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீஸ் துறையில் சாதாரண காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வு பெறுவதற்குள் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வரை பதவி உயர்வு பெறுவார்கள். போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் வேலை செய்யும் ‘ஆர்டர்லி‘ நடைமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளோம். அந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.