பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு


பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:50 AM IST (Updated: 15 Nov 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் வழியாகவும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலமாகவும் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து பாலைவனம் போல் காட்சியளித்தது.

இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 6–ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கடந்த மே மாதம் 1–ந்தேதி முதல் பேபி கால்வாயில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டது. அன்று ஏரியில் வெறும் 10 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 25.55 அடியாக பதிவானது. 924 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 196 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்மட்டம் அதிகரித்து வருவதால் நேற்று காலை சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வினாடிக்கு 6 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story