தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு கலெக்டர் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 2:30 AM IST (Updated: 15 Nov 2017 7:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியின விவசாயிகளுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

துரித மின் இணைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பழங்குடியினர் விவசாயியாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன், அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்இணைப்பு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

சான்றிதழ்கள்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விவரங்களுடன் ரே‌ஷன் கார்டு அல்லது இருப்பிடசான்று, சாதிச்சான்று, வருமான சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதுக்கான ஆதார சான்று(பள்ளி மாற்று சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, மதிப்பெண் சான்று) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா (ம) சிட்டா அடங்கல் நகல், ‘அ‘ பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், கிணறு அமையப்பெற்றுள்ள கிராமம், மோட்டார் குதிரைதிறன் விவரம், சம்பந்தப்பட்ட மின்வாரிய கோட்டம் ஆகிய விவரங்களுடன் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20– செலுத்தி விண்ணப்பிக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story