நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.53¾ கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது; அமைச்சர் பாஸ்கரன்
மாவட்டத்தில் நடப்பாண்டில் 13 ஆயிரத்து 223 விவசாயிகளுக்கு ரூ.53 கோடியே 83 லட்சம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட அளவிலான அனைத்திந்திய 64–வது கூட்டுறவு வார விழா சிவகங்கையில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் கடந்த 2016–ம் ஆண்டு 30 ஆயிரத்து 317 விவசாயிகளுக்கு ரூ.96 கோடியே 54 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், அதாவது கடந்த மாதம்(அக்டோபர்) 31–ந்தேதி வரை 13 ஆயிரத்து 223 விவசாயிகளுக்கு ரூ.53 கோடியே 83 லட்சம் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும் மற்றும் விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவு துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கும் அமைச்சர் பாஸ்கரன் பரிசுகளை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு துணை பதிவாளர் பாரதி நன்றி கூறினார்.