அருப்புக்கோட்டையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை


அருப்புக்கோட்டையில் 10 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி  குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2017 4:00 AM IST (Updated: 16 Nov 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை நகராட்சி மூலம் சுழற்சி முறையில் வினியோகம் செய்து வருகின்றனர். வைகை அணையில் இருந்து வரும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் தாமிரபரணி கூட்டு குடிநீர் மூலம் கிடைக்க பெறும் குடிநீரையே 20 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வினியோகம் செய்கின்றனர். பொதுமக்களும் வரும் நீரை பிடித்து தேக்கி வைக்க ஆரம்பித்தனர். இதனால் தண்ணீரில் கொசுப் புழு உருவாகும் நிலை ஏற்பட்டது.

டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதார அதிகாரிகளும் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். எனவே குறைந்த பட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் சாத்தூர் ராமச்சந்தரன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்துக்குப் பின்னர் அவர் கூறியதாவது:–

தற்போது அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைவில்லாமல் கிடைக்கிறது. இதனை தேக்கி வைத்து விநியோகம் செய்ய நகராட்சியில் 34 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகமும் தாமிரபரணி தண்ணீரை 20 நாட்களுக்கு ஒரு முறை தான் சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வரும் தண்ணீர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நகருக்கு வந்தடைகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது.

இதற்கு மாற்றாக, தாமிரபரணி தண்ணீரை பகல், இரவு நேரங்களில் சம பங்கு அளவில் கொடுப்பதற்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். தற்போது புதிதாக கட்டப்பட்டு உள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு வரும் போது 54 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன் மூலம் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய முடியும். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கூடுதலாக புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்க்குள் அப்பணிகள் நிறைவு பெறும்.

இவ்வாறு சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story