மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.88½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.88½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:30 AM IST (Updated: 16 Nov 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.88½ லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டபாளையம், பருத்திபள்ளி, ராமபுரம், அவிநாசிப்பட்டி, மல்லசமுத்திரம் மேல்முகம், கருமனூர், செண்பகமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக பருத்தி பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ்மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், இதே திட்டத்தின் கீழ்பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தாய் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைந்து முடிக்க உத்தரவு

அவிநாசிப்பட்டி ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி, ராமபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சிக்கூடம் உள்பட மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.88 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் தரமாகவும், தாமதமின்றி விரைவாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக கோட்டபாளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, புஷ்பராஜன், உதவி பொறியாளர் ஈஸ்வரமுர்த்தி, பணி மேற்பார்வையாளர் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story