கலெக்டர் ஆய்வு: டெங்கு தடுப்பு பணியை மேற்கொள்ளாத சுகாதார மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்


கலெக்டர் ஆய்வு: டெங்கு தடுப்பு பணியை மேற்கொள்ளாத சுகாதார மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, சூளகிரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணியை மேற்கொள்ளாத சுகாதார மேற்பார்வையாளரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள், உரல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தொட்டி மற்றும் தேவையற்ற கழிவு பொருட்களை வைத்திருந்த 10 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் அந்த பகுதியில் குடிநீர் குடங்கள் தூய்மையின்றி லார்வா புழுக்கள் உற்பத்தியாகின்ற வகையில் வைத்திருந்திருந்ததையடுத்து, தூய்மை பணியாளர்கள் மூலம் பிளிச்சிங் பவுடர் கொண்டு தூய்மைப்படுத்தியதற்காக (கிளினிங் சார்ஜ்) ரூ.50 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சரிவர மேற்பார்வை மேற்கொள்ளாத கிருஷ்ணகிரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் என்பவரை பணிஇடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து சூளகிரி ஜங்சன் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் டேங்கர் லாரி மற்றும் தேவையற்ற பொருட்கள் இருந்ததையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், அங்குள்ள உணவு அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு உணவகம் தயாரிக்கும் இடம் தூய்மை இல்லாமல் இருந்ததையடுத்து ரூ. 70 ஆயிரம் அபராதம் விதிக்கவும் கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

மேலும் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் நீர்த்தேக்க தொட்டியில் லார்வா புழுக்கள் உற்பத்தி இருந்ததையடுத்து அந்த பிரியாணி கடைக்கு சீல் வைக்க அவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து நல்லூர் பகுதியில் பழைய பேப்பர் குடோனில் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததையடுத்து போலீஸ் துறை மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story