‘மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது’; முத்தரசன் குற்றச்சாட்டு


‘மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது’; முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Nov 2017 5:15 AM IST (Updated: 16 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

அரசு பணிகளில் கவர்னர் தலையிடுவதால் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக ஜனநாயகத்திற்கு புறம்பாக பல சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கவர்னர் கோவைக்கு வேறொரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது அங்கு இருக்கிற அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வேன் என்று கவர்னர் கூறியுள்ளார். தற்போதுள்ள அரசுக்கு மக்களின் ஆதரவும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடையாது. ஆட்சிப்பொறுப்பில் இருக்க எந்தவித தார்மீக உரிமையும் அற்ற நிலையில் மத்திய அரசின் தயவில் ஆட்சி நடக்கிறது. பலவீனமான அரசாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு இங்கு வருகிற கவர்னர் தங்கள் விருப்பம்போல் தன்னிச்சையாக செயல்படுகிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழக கவர்னர் செய்தது தவறு இல்லை என்று அமைச்சர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கூறுகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று நடந்ததில்லை. இங்கு இருக்கிற அமைச்சர்கள் அனைவரும் மத்திய அரசுக்கு அடிமைபோல் செயல்பட்டு கவர்னரின் பேச்சை நியாயப்படுத்தி பேசுகிறார்கள். மத்திய அரசின் முகவராக இருக்கக்கூடிய கவர்னர் இப்படி நேரடியாக பணியில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. மாநில அரசின் உரிமைகள், சுயாட்சியை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கவர்னர் இதுபோன்ற ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது.

தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போதுள்ள அரசு, நீதிமன்ற உத்தரவையும் மீறி படிப்படியாக புதிய, புதிய டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி, பேரூராட்சி சாலையாக மாற்றி கடைகளை திறக்கிறார்கள். இந்த செயல் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை மீறுகிற செயலாகும். உடனே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல்படை, அந்த மீனவர்களை தாக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை கிடைக்க செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரால் ரே‌ஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் எதிர்காலத்தில் இல்லை என்ற நிலை வரப்போகிறது. ஏனெனில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சர்க்கரை விலையை இரு மடங்காக உயர்த்தினார்கள். தற்போது உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளனர். உணவு பாதுகாப்பு சட்டத்தை ஜெயலலிதா நிராகரித்தார். ஆனால் தற்போதுள்ள அரசு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் பெரும்பாலான மக்களுக்கு ரே‌ஷன் கார்டே இருக்காது.

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால்களை தூர்வாரியிருக்க வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் தவறான வழிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story