வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதையடுத்து கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை கடந்த 27–ந் தேதி பெய்ய தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிலும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது. மழையால் குறிப்பிட்ட அளவில் ஏரி, குளங்கள் நிரம்பின.
பின்னர் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக மழை இல்லை. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிருமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு 300 கிலோ மீட்டர் தெற்கே மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.