முக்கொம்பு சுற்றுலா மையத்தை இயற்கை எழிலோடு பராமரிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


முக்கொம்பு சுற்றுலா மையத்தை இயற்கை எழிலோடு பராமரிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்தில் சிறுவர் ரெயில், படகு சவாரியை மீண்டும் தொடங்குவதோடு இயற்கை எழிலோடு பராமரிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டத்தில் இயற்கையோடும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் அழகோடு அமைந்துள்ளசுற்றுலா மையம் முக்கொம்பு சுற்றுலா மையமாகும். இந்த சுற்றுலா மையம் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்க கூடியதுமாகும். இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலா மையமாக உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த சுற்றுலா மையத்தை மேம்படுத்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுற்றுலா வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.3 கோடி10 லட்சம் நிதியை ஒதுக்கினார். இதன் மூலம் சுற்றுலா மையத்தில் சிறுவர் ரெயில் படகு சவாரி, பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வராத நிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆய்வு செய்தார்.

அப்போது படகு சவாரி உள்ள இடத்தை ஆய்வு செய்யும்போது தற்போதுள்ள 2 படகுகளையும் தவிர்த்து சுற்றுலா பயணிகள் வசதிக்காக கூடுதலாக 2 படகுகள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நிதியுதவி செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் படகு சவாரி செய்யும் இடத்தில் உள்ள காய்ந்த தென்னை மரங்களை ஒரு வார காலத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

குடிநீர்

அதன் பிறகு சிறுவர் ரெயில் பகுதிக்கு சென்று ரெயில் பயன்பாடு பற்றியும்,அதன் பாதுகாப்பு தன்மை பற்றியும்,பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ,சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் குடி தண்ணீரில் குளோரின் கலந்துள்ளதா? என்று தண்ணீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். வீணாகும் கழிவுநீர் சுற்றுலா மையத்தில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.மேலும் ஆண்களுக்கான கழிவறை, தற்போதுள்ள சிறுவர்கள் விளையாட கூடிய சாதனங்கள்,குழந்தைகளுக்கு தேவையான சாதனங்கள் அமைக்கவும், தரமான சிறு உணவகம் அமைக்கவும் திட்ட மதிப்பீடு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

படகு சவாரி

மேலும் முக்கொம்பு சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் இயற்கை எழிலோடு பராமரிக்கவும் பயன்பாட்டில் இல்லாத சிறுவர் ரெயில் மற்றும் படகு சவாரியை சுற்றுலா பயணிகள் நலன் கருதி இயக்கவும் மாவட்ட கலெக்டர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன்,உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி பொறியாளர் ராஜரத்தினம்,சுற்றுலா துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story