புதுவை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் கைகள் சிதைந்தது
புதுவை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் கைகள் சிதைந்தது. ரகசியமாக வெடிகுண்டு தயாரித்தபோது இந்த விபரீதம் நடந்தது.
வானூர்,
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளத்தை சேர்ந்த கார்த்தி என்கிற எலி கார்த்தி (வயது 27). பிரபல ரவுடி. இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக்கு எதிரிகளால் பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து புதுவை அருகே உள்ள விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்புக்கு குடியேற முடிவு செய்தார்.
இதையடுத்து சுனாமி குடியிருப்பை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்தார். நேற்று முன்தினம் இரவு வாழைக்குளம் வீட்டை காலி செய்துவிட்டு சுனாமி குடியிருப்பில் குடும்பத்துடன் கார்த்தி குடியேறினார். கார்த்தி நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
நேற்று காலை 7 மணியளவில் கார்த்தி தனது வீட்டின் பின்பக்கம் ரகசியமாக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வெடிகுண்டை இறுக்கி கட்டி தயாரித்தபோது அழுத்தம் ஏற்பட்டு திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது இரண்டு கைகளில் 10 விரல்களும் சிதைந்த தொங்கிய நிலையில், காலில் பலத்த காயத்துடன் கார்த்தி கதறி துடித்துக் கொண்டிருந்தார்.
உடனே இதுபற்றி ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் மற்றும் போலீசார் காயமடைந்த கார்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தடயவியல் உதவி இயக்குனர் சண்முகம் ஆகியோர் சுனாமி குடியிருப்புக்கு வந்தனர். அவர்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டனர். எந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்று சோதனை செய்ய அங்கு சிதறி கிடந்த வெடி பொருட்களை தடயவியல் உதவி இயக்குனர் சேகரித்தார்.
நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பதால் கார்த்தி வீட்டின் மேற்கூரை, குளியல் அறை மற்றும் பக்கத்து வீடுகளின் சுவர்களும் சேதமடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக கார்த்தியின் மனைவி அருணா மற்றும் மகளுக்கு லேசான காயம்கூட ஏற்படவில்லை.
நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ரவுடி படுகாயமடைந்த சம்பவம் சுனாமி குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் சுற்று வட்டாரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதில் கார்த்தி கில்லாடி. இதனால் அவருக்கும், பல்வேறு தாதாக்கள் மற்றும் ரவுடிகளுக்கும் நல்ல தொடர்பு உள்ளது. இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி உள்பட 10–க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது யாரை கொலை செய்ய? யாருடைய உத்தரவின்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை கார்த்தி தயாரித்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்றும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
2004–ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி பகுதியில் ஏராளமான மீனவர்களின் வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து அரசு சார்பில் சுனாமி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் 107 வீடுகள் உள்ளன. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே வசிக்கவேண்டும். வெளிநபர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்பது விதிமுறை.
ஆனால் அதை மீறி கார்த்திக்கு வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதேபோல் பல வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், குற்றப்பின்னணி உள்ள நபர்களுக்கு எப்படி வாடகைக்கு வீடு கொடுக்கலாம் என்று கேட்டு, சுனாமி குடியிருப்பு மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
புதுவையில் கடந்த சில மாதங்களாக ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டு கொலைகள் அரங்கேறின. இதையடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். போலீசாரின் ரோந்து பணியின்போது ஆயுதங்கள் வைத்திருந்ததாக, பொதுமக்களை மிரட்டியதாக, கொலை மற்றும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக என பல்வேறு வழக்குகளில் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுவையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகமானதாலும், எதிரிகளால் பிரச்சினை எழுந்ததாலும் வாழைக்குளத்தில் தங்கியிருந்த கார்த்தியால் முன்புபோல் வெடிகுண்டு தயாரிக்க முடியவில்லை. இதையடுத்து புதுவை எல்லை பகுதியில் உள்ள பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்புக்கு நேற்று முன்தினம் குடியேறியுள்ளார். அங்கு போலீசாரின் கெடுபிடி அதிகம் இல்லாததால் குடியேறிய மறுநாளே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து கார்த்தி படுகாயம் அடைந்தார்.