சட்டசபையில் தர்ணாவை வாபஸ் பெற்றது பா.ஜனதா


சட்டசபையில் தர்ணாவை வாபஸ் பெற்றது பா.ஜனதா
x
தினத்தந்தி 16 Nov 2017 5:32 AM IST (Updated: 16 Nov 2017 5:32 AM IST)
t-max-icont-min-icon

தங்களுடைய கோரிக்கையை ஏற்று விவாதிக்க அனுமதி வழங்குவதாக சபாநாயகர் உறுதி அளித்ததால் சட்டசபையில் தர்ணாவை பா.ஜனதா கட்சி வாபஸ் பெற்றது.

பெலகாவி,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் கடந்த 13–ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 3–வது நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு 2–வது நாளாக தர்ணா போராட்டத்தை நடத்தினர்.

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பா.ஜனதா மற்றும் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், “போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணபதி தங்கி இருந்த விடுதியில் இருந்து விசாரணை அதிகாரிகள் துப்பாக்கி குண்டை கண்டுபிடித்து எடுத்துள்ளனர். இதுபற்றி அதிகமாக பேச வேண்டியுள்ளது. எனவே இதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்க வேண்டும். சபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. வட கர்நாடக பிரச்சினைகள், மகதாயி நதி நீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

அப்போது சபாநாயகர் கே.பி.கோலிவாட் தலையிட்டு, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்க முடியாது என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் வேறு விதியின் கீழ் அதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்குவதாக அவர் கூறினார். பா.ஜனதா உறுப்பினர்கள் இதை ஏற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு திரும்பினர். அதைத்தொடர்ந்து வழக்கமான சபை நடவடிக்கைகள் தொடங்கின.



Next Story