நெல்லை அருகே பெண் டாக்டர் தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
நெல்லை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் டாக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
நெல்லை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் டாக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
பெண் டாக்டர்நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி டாக்டர் உஷாராணி (வயது 52). இவர் தாழையூத்து பஜாரில் கிளினிக் நடத்தி வந்தார்.
இவர்களுக்கு சாய்பிரகாஷ் (20) என்ற மகனும், ஸ்ரீமதி (17) என்ற மகளும் உள்ளனர். சாய்பிரகாஷ், சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஸ்ரீமதி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வருகிறார். பிள்ளைகள் வெளியூர்களில் தங்கி படிப்பதால், முரளி தான் பணிபுரிந்து வரும் தனியார் நிறுவன குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார்.
நடத்தையில் சந்தேகம்உஷாராணியின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் உஷாராணி தனது அறைக்கு தூங்கச் சென்றார். முரளி இன்னொரு அறைக்கு தூங்க சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் உஷாராணி மனம் உடைந்து இருந்ததாக தெரிகிறது. அறையில் தனியாக இருந்த உஷாராணிக்கு திடீரென்று தற்கொலைக்கான எண்ணம் ஏற்பட்டது.
தற்கொலைஅறைக்கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். மனதை கல்லாக்கிக் கொண்டு மருத்துவ துறையில் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தை (எத்தில் ஆல்கஹால்) தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென உடலில் பற்றி எரிந்தது. மனைவியின் அலறல் சத்தம் கேட்டு முரளி ஓடி வந்தார். கதவை தட்டிப்பார்த்தார் திறக்கவில்லை.
கதவை உடைத்து பார்த்தார். அதற்குள் உஷாராணி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து முரளி கதறி அழுதார்.
போலீஸ் விசாரணைதகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கரிக்கட்டையாக கிடந்த உஷாராணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
நெல்லை அருகே பெண் டாக்டர் உஷாராணி தற்கொலை கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.