கோவில்பட்டி பகுதியில் ரூ.8½ கோடியில் புதிய சாலை பணிகள் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
கோவில்பட்டி பகுதியில், ரூ.8½ கோடியில் புதிய சாலை பணிகள் நடைபெற உள்ளதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பகுதியில், ரூ.8½ கோடியில் புதிய சாலை பணிகள் நடைபெற உள்ளதாக, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
குடிநீர் திட்டம்கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2–வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து இளவேலங்கால் வழியாக கோவில்பட்டி வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு வார்ப்பு இரும்பிலான ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோவில்பட்டி அருகே குருமலை– ஊத்துப்பட்டி இடையில் வனத்துறைக்கு சொந்தமான 1.7 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் பதிக்க வனத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது.
வனத்துறை அனுமதிஇந்த நிலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழாய்கள் பதிக்க வனத்துறையினர் நேற்று முன்தினம் அனுமதி வழங்கினர். இதையடுத்து ஊத்துப்பட்டியில் இருந்து குருமலை வரையிலும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவில்பட்டியில் 2–வது குடிநீர் திட்ட பணிகளை இரவும் பகலுமாக விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரூ.8½ கோடியில் சாலைகள்பின்னர் கோவில்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘கோவில்பட்டியில் இருந்து மந்திதோப்பு வழியாக ஊத்துப்பட்டி வரையிலும் 4 கி.மீ. தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்க ரூ.1½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோவில்பட்டி மெயின் ரோடு லாயல்மில் மேம்பாலத்தில் இருந்து லட்சுமி மில் மேம்பாலம் வரையிலும் 2.2 கி.மீ. தூரத்துக்கு 15.1 மீட்டர் அகலத்தில் புதிய தார் சாலை அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் சார்பதிவாளர் அலுவலகம், பெட்ரோல் பங்க், மார்க்கெட் ரோடு சந்திப்பு, புதுரோடு சந்திப்பு, பத்மா ஆஸ்பத்திரி ஆகிய 5 இடங்களில் சிறிய பாலங்களும் அமைக்கப்படும். இந்த பணிகளுக்கு வருகிற 22–ந்தேதி டெண்டர் விடப்படும்’ என்று தெரிவித்தார்.
கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆன்ட்ரூஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.