தூத்துக்குடியில் பாண்டியன் கிராம வங்கி சார்பில் ரூ.8 லட்சம் கந்து வட்டி மீட்பு கடன் உதவி


தூத்துக்குடியில் பாண்டியன் கிராம வங்கி சார்பில் ரூ.8 லட்சம் கந்து வட்டி மீட்பு கடன் உதவி
x
தினத்தந்தி 17 Nov 2017 2:00 AM IST (Updated: 16 Nov 2017 8:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாண்டியன் கிராம வங்கி சார்பில் ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்துக்கான கந்து வட்டி மீட்பு கடன் உதவியை வங்கி தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பாண்டியன் கிராம வங்கி சார்பில் ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்துக்கான கந்து வட்டி மீட்பு கடன் உதவியை வங்கி தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

கடன் உதவி

தூத்துக்குடியில் கந்துவட்டி மீட்பு கடன் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி பாண்டியன் கிராம வங்கி மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு பொது மேலாளர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பாண்டியன் கிராம வங்கி தலைவர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்துக்கான கடன் உதவியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் தெய்வநாயகம், தலைமை மேலாளர் செல்வகணேசன், முதுநிலை மேலாளர் நெல்லையப்பன், புதுக்குடி கிளை மேலாளர் ஜான் ராஜநாயகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாண்டியன் கிராம வங்கி தலைவர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பனை தோழன்

வேளாண்மை துறையில் ஒருங்கிணைந்த கடன் வழங்குவதற்காக, வளம் என்ற திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் நிலம் வாங்குவது முதல் விளைபொருட்களை விற்பனை செய்வது வரை அனைத்து நிலைகளிலும் கடன் வழங்கப்படும். பனை தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுவணிகர்களை கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து மீட்க பனை தோழன், மீனவ தோழன் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் பனை தோழன் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 6 லட்சமும், மீனவ தோழன் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 67 லட்சமும், சிறுவணிக கடன் ரூ.1 கோடியே 50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.15 கோடி

தற்போது கந்து வட்டி மீட்பு கடன் உதவி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கந்து வட்டியில் வாங்கிய கடன்களை அடைக்க பொதுமக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். இது தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டியில் சிக்கி தவிப்போர் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் ரூ.15 கோடி வரை கடன் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

மேலம் அனைத்து வகையான கடன்களையும், குறைந்த வட்டியில் வழங்க எளிமை என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் கடன் மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 11 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறையும். மீனவர்கள் ஆழ்கடன் மீன்பிடிப்பு படகு வாங்குவதற்கு கடன் உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 500 படகுகளுக்கு கடன் உதவி வழங்க திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story