அக்காள்-தங்கை காரில் கடத்தல் 13 மணி நேரத்தில் வீட்டின் அருகே கடத்தல்காரர்கள் விட்டு சென்றனர்


அக்காள்-தங்கை காரில் கடத்தல் 13 மணி நேரத்தில் வீட்டின் அருகே கடத்தல்காரர்கள் விட்டு சென்றனர்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:45 AM IST (Updated: 17 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பள்ளிக்கு சென்ற போது காரில் கடத்தப்பட்ட அக்காள்-தங்கை போலீசாரின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து 13 மணி நேரத்தில் வீட்டின் அருகே கடத்தல்காரர்கள் அவர்களை விட்டு சென்றனர்.

மதுரை,

மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகைசெல்வன். இவர் விளக்குத்தூண் பகுதியில் மளிகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அனுஸ்ரீ(வயது 9), ஜெயஸ்ரீ(5) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் புதுராமநாத புரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். நேற்று காலை 9 மணியளவில் இவர்கள் காரில் பள்ளிக்கு சென்றனர். காரை வண்டியூரை சேர்ந்த டிரைவர் பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றார்.

புதுராமநாதபுரம் ரோட்டில் சென்றபோது அவரது காரை மற்றொரு கார் வழி மறித்தது. காரில் இருந்த 2 பேர் வெள்ளை நிறத்தில் சட்டையும், காக்கி கலரில் பேண்டும் அணிந்து வந்து இறங்கினார்கள். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறி அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும். எனவே அவர்களை தங்கள் காரில் அழைத்து செல்கிறோம் என்று கூறி, காரை விட்டு இறங்குமாறு தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள், அக்காள்-தங்கையை காரில் ஏற்றி கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரியவந்தது.

இந்த தகவல் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக 8 தனிப் படைகளை அமைத்தார். இந்த தனிப்படைகள் மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கடத்தப்பட்ட அக்காள்-தங்கையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆங்காங்கே, போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் போலீசாரின் விசாரணையில் அக்காள்- தங்கையை கடத்திய கார் தெப்பக்குளம், ரிங்ரோடு வழியாக சென்றது கண்காணிப்பு கேமராவில் தெரியவந்தது. இதற்கிடையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரமாவதை உணர்ந்த கடத்தல்காரர்கள் தாங்கள் சிக்கி விடுவோம் என பயந்து நேற்று இரவு 10 மணியளவில், அக்காள்-தங்கையை அவர்கள் வீட்டின் அருகே வைகை ஆற்றுப்பகுதியில் விட்டு சென்றனர். இந்த தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களை கடத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தப்பட்ட 13 மணி நேரத்தில் அக்காள்- தங்கையை கடத்தல்காரர்கள் விட்டு சென்றிருப்பது குறிப் பிடத்தக்கது. 

Next Story