பாலியல் வழக்கில் கைதான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது


பாலியல் வழக்கில் கைதான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 Nov 2017 4:45 AM IST (Updated: 17 Nov 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சித்தூர் அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் என்கிற நாகராஜன் (வயது 53). தி.மு.க. பிரமுகரான இவர் சித்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்தார்.

எடப்பாடியை அடுத்த பக்கநாடு கிராமத்தை சேர்ந்த ஒரு 25 வயது இளம்பெண் தனது குடும்பப்பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு நாகராஜிடம் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பணம் பெற்றதுடன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது.

இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் கணவர் வந்து நாகராஜை தட்டிக்கேட்டார். அதற்கு நாகராஜ் அவரை சாதிப்பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 31-ந் தேதி பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான நாகராஜ் மீது ஏற்கனவே பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளன. எனவே, தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நாகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையை ஏற்று நாகராஜை ‘பாலியல் குற்றவாளி‘ என்று குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நாகராஜிடம் நேற்று வழங்கப்பட்டது. 

Next Story