எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: கோவை வ.உ.சி. மைதானத்தில் கால்கோள் விழா 6 அமைச்சர்கள் பங்கேற்றனர்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: கோவை வ.உ.சி. மைதானத்தில் கால்கோள் விழா 6 அமைச்சர்கள் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:30 AM IST (Updated: 17 Nov 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் 6 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கோவை,

தமிழகம் முழுவதும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவை வ.உ.சி. மைதானத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. விழாவுக்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை 10 மணியளவில் நடந்தது.

விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தின் நுழைவு வாயிலில் பந்தல் கால் அமைக்கப்படும் இடத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் அமைப்பதற்கான கம்பம் நடப்பட்டது.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் விழா பந்தலுக்கான கால்கோளை நட்டனர்.

இதில், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், சூலூர் கனகராஜ், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், கே.பி.ராஜு, கோவை செல்வராஜ் மற்றும் சி.டி.சி. சின்ராஜ், சி.டி.சி. ஜப்பார், சின்னவேடம்பட்டி சுப்பையன், வால்பாறை அமீது உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா எண்ணினார். அவரது எண்ணத்தை, அவர் கொண்டு வந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் வ.உ.சி. மைதானத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த வ.உ.சி. மைதானத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால் 2011-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின்போது கோவை வ.உ.சி. மைதானத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு நடத்திய பொதுக் கூட்டம்தான் ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் கோவையில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்தும் நாங்கள் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மற்ற மாவட்டங்களை போன்று கோவையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story