பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் வருமானம்


பழனி முருகன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் வருமானம்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் 15 நாட்களில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 34 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 1-ந்தேதி உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதன்பின்னர் 15 நாட்களுக்கு பிறகு, நேற்று பழனி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன், மேலாளர் (பொறுப்பு) செல்வசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டன.

ரூ.1 கோடியே 34 லட்சம்

உண்டியல் எண்ணிக்கையில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 644 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும் 545 கிராம் தங்கம், 4420 கிராம் வெள்ளி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், சவுதி அரேபியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 640-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

இதைத்தவிர தங்கத்தால் ஆன விளக்கு, வேல், தாலி, சங்கிலி, மோதிரங்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இதேபோல் வெள்ளியிலான வேல், பாதம், வீடு, காசுகள், காவடி, குத்துவிளக்கு, கிரீடம் உள்ளிட்ட பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி ஆகியவையும் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் பல்வேறு வங்கி அலுவலர்கள், ஊழியர்கள், பழனி மகளிர் கலை கல்லூரி மாணவிகள், சமுதாய பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், நாதஸ்வர, தவில் கல்லூரி மாணவர்கள், கோவில் அலுவலர்கள் என 500-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

Next Story