திருச்சி வருமானவரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை அடுத்த வாரம் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக தகவல்


திருச்சி வருமானவரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை அடுத்த வாரம் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வருமானவரி அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை. அடுத்த வாரம் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி,

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மெகா சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் மற்றும் தங்க, வைர நகைகள் அதிகாரிகளிடம் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலா தம்பி திவாகரனின் வீடு, கல்லூரி ஆகிய இடங்களிலும் கடந்த 9-ந் தேதி முதல் 3 நாட்கள் தொடர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

திவாகரனுக்கு சம்மன்

மேலும், திவாகரனின் கல்லூரியில் உள்ள ஒரு அலுவலக அறையையும் பூட்டி சீல் வைத்தனர். சோதனை முடிந்து சென்றபோது மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என்றும், அப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் திவாகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி சென்றனர். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு திவாகரன் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதனால் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி திருச்சி வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர்களும் நேற்று காலை முதலே அங்கு திரண்டு இருந்தனர்.

ஆஜராகவில்லை

ஆனால் திவாகரன் நேற்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “அவர் இன்றைக்கு (நேற்று) ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு தினத்தில் ஆஜராக இருப்பதாகவும் கூறி உள்ளார்” என்று மட்டுமே தெரிவித்தனர். இதனால் திவாகரன் அடுத்த வாரத்தில் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Next Story