அண்டாப்ஹில்லில் வீடுகளின் ஏணிப்படிகள் திடீர் அகற்றம்


அண்டாப்ஹில்லில் வீடுகளின் ஏணிப்படிகள் திடீர் அகற்றம்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:02 AM IST (Updated: 17 Nov 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

அண்டாப்ஹில்லில் வீடுகளின் ஏணிப்படிகள் திடீரென அகற்றப்பட்டன. இதனால் கீழே இறங்க முடியாமல் மாடிகளில் மக்கள் தவித்தனர்.

மும்பை,

மும்பை அண்டாப்ஹில் விஜய் நகர் சாந்தினி நகர் பகுதியில் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் மாடிகள் உள்ளன. இங்கு சாலையையொட்டி உள்ள வீடுகளின் மாடிக்கு செல்வதற்காக சாலையின் கீழே செல்லும் சாக்கடை மீது இரும்பிலான ஏணிப்படிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதுபற்றி மாநகராட்சிக்கு புகார் சென்று உள்ளது. இதையடுத்து நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்து மாநகராட்சி அதிகாரிகள் ஏணிப்படிகளை உடைத்து அப்புறப்படுத்தினார்கள்.

இதுபற்றி வீடுகளின் மாடிகளில் இருந்தவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திடீரென ஏணிப்படிகள் அப்புறப்படுத்தப்பட்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எப்படி கீழே இறங்குவது என்பது தெரியாமல் தவித்தனர்.

இந்தநிலையில், மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. 7 வீடுகளின் ஏணிப்படிகள் அகற்றப்பட்ட நிலையில், தகவல் அறிந்து அப்பகுதி பா.ஜனதா கவுன்சிலர் கிருஷ்ணவேணி ரெட்டி விரைந்து வந்தார். அவர் வீடுகளின் ஏணிப்படிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து மாநகராட்சியினர் ஏணிப்படிகளை அகற்றும் பணியை தற்காலிகமாக கைவிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர். முன்னதாக அங்கு இருந்த சட்டவிரோத கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story