வேலை நிறுத்தம் செய்து வரும் தனியார் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்


வேலை நிறுத்தம் செய்து வரும் தனியார் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:52 AM IST (Updated: 17 Nov 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தனியார் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசு தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்ட திருத்த மசோதாவை தயார் செய்து உள்ளது.

அதன்படி நோய்களுக்கான சிகிச்சை கட்டணங்களை நிர்ணயம் செய்வது, தவறு செய்யும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக மாவட்டங்களில் கண்காணிப்பு குழு அமைப்பது, நோயாளி மரணம் அடைந்துவிட்டால் சிகிச்சை செலவுகளை செலுத்தினால் தான் பிணத்தை ஒப்படைப்போம் என்று கூறக்கூடாது மற்றும் தவறு செய்யும் டாக்டர்களுக்கு சிறை தண்டனை என்பது போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெலகாவியில் நடைபெறும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் அந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை கண்டித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பெலகாவியில் ஒன்றாக கூடி போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் பெலகாவியில் உள்ள சுவுர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலம் முழுவதும் 6 ஆயிரம் தனியார் மருத்துவமனைகள் மற்றும் 22 ஆயிரம் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தம் காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் மாநிலம் முழுவதும் 22 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.

போராட்டம் நடத்தி வரும் தனியார் டாக்டர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையாவும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இதனால் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நீதிபதி ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் டாக்டர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எங்கும் கூறவில்லை. சங்க மாநில தலைவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சில டாக்டர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்“ என்றார்.

அப்போது அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக் ஆஜராகி வாதிடுகையில், “தனியார் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இன்று(நேற்று) மாலை தனியார் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்“ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரமேஷ், “டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை டாக்டர்கள் கவனிக்க வேண்டும். டாக்டர்களுக்கு சமுதாயத்திற்கு சேவையாற்றும் கடமை உள்ளது. இதை உணர வேண்டும். எனவே தனியார் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். இந்த சமுதாயத்தின் நலனுக்காக கோர்ட்டு இந்த கருத்தை கூறுகிறது. நாங்கள் இதுபற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அரசு திறந்த மனதுடன் இருப்பதாக கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த மசோதா இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யவில்லை. இந்த சட்டம் இன்னும் அமல்படுத்தவில்லை“ என்றார்.

அதைத்தொடர்ந்து இந்த பொதுநல மனு மீதான விசாரணையை மறுநாளைக்கு(இன்று) நீதிபதி தள்ளி வைத்தார்.

Next Story