ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி நிதி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி நிதி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்படுவதாவது:–
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகானது கடந்த 2013–ம் ஆண்டில் இருந்து பெற்றோரை இழந்த குழந்தைகள், மிகவும் வறுமையில் உள்ள குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி நலன் கருதி அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது.நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 41 குழந்தைகளுக்கு நிதி ஆதரவுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2016–17ம் நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 57 பேருக்கு நிதி ஆதரவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், கல்வி, சாதி, வருமான சான்றிதழ், ஆதார் எண், மருத்துவச் சான்று, பெற்றோரின் இறப்புச்சான்று ஆகியவற்றுடன் நிதி ஆதாரம் கோரிய விண்ணப்பத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூர்–1 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story