நெல்லை மாநகரில் வைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் வரவேற்பு பேனர்களை அகற்ற வேண்டும்
நெல்லைக்கு டி.டி.வி.தினகரன் இன்று (சனிக்கிழமை) வருவதையொட்டி மாநகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லை,
நெல்லைக்கு டி.டி.வி.தினகரன் இன்று (சனிக்கிழமை) வருவதையொட்டி மாநகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
டிஜிட்டல் பேனர்கள்அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (சனிக்கிழமை) நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லையில் நடைபெறும் வ.உ.சி. குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதையொட்டி டி.டி.வி.தினகரனை வரவேற்கும் வகையில் ஆதரவாளர்கள் நெல்லை மாநகரில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். கே.டி.சி.நகர் பாலத்தில் தொடங்கி வ.உ.சி. மணிமண்டபம் வரை சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்இந்த நிலையில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா அணி) மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.டி.காமராஜ் மற்றும் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணா சிங்கை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
பேனர்களை அகற்ற வேண்டும்இன்று (சனிக்கிழமை) நெல்லைக்கு டி.டி.வி.தினகரன் வரப்போவதாக தெரிகிறது. அதற்காக நெல்லை சந்திப்பில் இருந்து பாளையங்கோட்டை வரை ரோட்டின் இருபுறமும் பேனர்கள் வைத்துள்ளனர். இவை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளன. மேலும் உயிரோடு இருக்கும் நபர்களின் படத்தை பேனர்களில் பதிவு செய்து உள்ளனர். இது கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது. மேலும் இந்த பேனர்களை வைப்பதற்கு எந்தவித அனுமதியும் பெறவில்லை. எனவே அந்த பேனர்களை உடனடியாக அகற்றி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எந்தவித சிரமமும் இன்றி ரோட்டை உபயோகப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அப்போது முன்னாள் கவுன்சிலர் பாளை.பரமசிவன், கிளாசிக் பாரத், சோமசுந்தரம், கிருஷ்ணன், துரை முத்தையா, முத்துவேலப்பன், மகேஷ், நாராயணமூர்த்தி, சீனிவாசபிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.