நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்தவர் குணசேகரன். லாரி டிரைவர். இவருடைய மகள் ரமண ஜோதி (வயது 19).
நெல்லை,
தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்தவர் குணசேகரன். லாரி டிரைவர். இவருடைய மகள் ரமண ஜோதி (வயது 19). தூத்துக்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு வேலை குறித்த பயிற்சிக்காக நெல்லையில் உள்ள அதே நிறுவனத்தின் ஜவுளிக்கடைக்கு வந்தார். அப்போது மானூர் அருகே உள்ள பள்ளமடையை சேர்ந்த மாயாண்டி மகன் மகேசுவரன் (21) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ரமண ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நெல்லை குறுக்குத்துறையில் உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் மகேசுவரன், ரமணஜோதி ஆகியோர் தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தஞ்சம் அடைந்தனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.