தமிழகம் குழப்ப நிலையில் இருக்க வேண்டும் என்றே அரசியல் செய்கிறார்கள்; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் எப்போதும் குழப்ப நிலையிலேயே இருக்க வேண்டும் என்றே சிலர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என திருப்பூரில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருப்பூர்,
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று திருப்பூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
இலவச கியாஸ் இணைப்பு திட்டம், முத்ரா வங்கி கடன் திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் என ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயல்படுத்தி வருவதால்தான், இந்தியாவின் பிரபலமான தலைவராக பிரதமர் மோடி இருந்துவருகிறார். அவரை விரும்பும் மக்களின் சதவீதமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வேண்டும் என்றே பிரதமரையும், பா.ஜனதா கட்சியையும் விமர்சனம் செய்தாலும், உலக அளவில் பிரதமர் நரேந்திரமோடியின் அங்கீகாரம் கூடி வருகிறது. அதுபோல் தமிழகத்திலும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அந்த செல்வாக்கை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய அங்கீகாரத்தை பெறும். ஆனால் தமிழக கவர்னர் ஆரோக்கியமான நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அது விமர்சனம் ஆகிறது. நல்ல திட்டங்கள் என்றாலும் அது உடனே தமிழகத்தில் வேண்டாத திட்டங்கள் போல் முன்னிறுத்தப்படுகிறது.
இந்திய கடற்படையினால் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு நான் வருத்தம் தெரிவித்தேன். விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். முதலில் கடற்படையினர் சுடவில்லை என்றார்கள். அதன்பிறகு பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும். மீனவர்களோடு சுமூக உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னதின் அடிப்படையில் கடற்படையினர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இனி இதுபோன்ற தாக்குதல் நடக்காது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லையை தாண்டியதில் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தத்துக்குரியது. அதையும், 2 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தையும் இணைத்து இந்திய–இலங்கை கூட்டு சதி என்பதை போன்று தவறான தோற்றத்தை திருமாவளவன், மற்றவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். மீனவர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பா.ஜனதா கட்சி மிகுந்த அக்கறையுடன் உள்ளது. இவர்கள் ஆட்சி செய்தபோது மீனவர்கள் நலனை இவர்கள் பாதுகாக்கவில்லை.
மீனவர்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இருந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு சம்பவமாக இருந்தாலும் அது உடனே திட்டமிட்டு மத்திய அரசு நடத்துவதை போல் ஒரு தோற்றத்தை கொடுப்பது நல்லதல்ல. இவர்களுக்கு தமிழகத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் வர வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
தமிழகம் எப்போதும் குழப்ப நிலையில் இருக்க வேண்டும். தமிழகம் எப்போதும் போராட்டக்களமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே தங்களால் அதில் குளிர்காய முடியும் என்று அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். தமிழக மக்களை காப்பதிலும், குறிப்பாக மீனவர்களை காப்பதிலும் பா.ஜனதா கட்சி மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைபாடாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகட்டும், உள்ளாட்சி தேர்தல் ஆகட்டும் தி.மு.க. முதலில் நடத்த வேண்டும் என்கிறார்கள். அதன்பிறகு நடத்தக்கூடாது என்றார்கள். என்னென்ன குறைபாடுகளால் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டதோ அவற்றை சரி செய்து நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும். தேர்தல் ஆணையமும் குறைகளை சரி செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதை விரைவுபடுத்தி நடத்த வேண்டியது தமிழக அரசு. பின்னடைவுகள் களையப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது யாரெல்லாம் குற்றம் சாட்டப்பட்டார்களோ, அவர்கள் மறுபடியும் தேர்தலில் நிற்க முடியுமா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்று சில வேட்பாளர்கள் மீது உறுதிபட குற்றச்சாட்டு இருந்தது. இவற்றை அலசி ஆராய்ந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தமிழக கவர்னர் சரியாக நடந்து கொண்டிருக்கிறார். கவர்னர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறார். கவர்னரை குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. முழுநேர கவர்னர் வேண்டும் என்றார்கள். கவர்னர் வந்து விட்டார். அவருக்கு உதவியாக இருக்காமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள். தமிழகத்தில் எந்த நல்ல திட்டங்கள் வந்தாலும் அதை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.