கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்தவர்!


கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்தவர்!
x
தினத்தந்தி 18 Nov 2017 1:28 PM IST (Updated: 18 Nov 2017 1:27 PM IST)
t-max-icont-min-icon

ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என்று நினைத்து பதற்றத்தை உருவாக்கிவிட்டார்.

வசரத்தில் சிலர் அபத்தமான தவறுகளைச் செய்துவிடுவது உண்டு. அப்படித்தான், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என்று நினைத்து பதற்றத்தை உருவாக்கிவிட்டார்.

சமீபத்தில், ஜெர்மனியின் கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர், தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பதாக படபடப்பாகக் கூறியுள்ளார். உடனே போலீசாரும் உஷாராகி, தமது படை பட்டாளத்துடன் விரைந்து அவர் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டின் பின்புறம் சோதனை செய்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு சுமார் 40 செ.மீ. நீளமுள்ள பெரிய கத்தரிக்காய் கிடந்துள்ளது.

அதைத்தான் அந்த முதியவர் வெடிகுண்டு என எண்ணி போலீசாருக்கு போன் செய்துள்ளார். கத்தரிக்காயை யாரோ அடையாளம் தெரியாத நபர் அவர் வீட்டில் போட்டுள்ளார். அதனால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

‘முறைப்படி’ சோதனை செய்த பின்னர் போலீசார் கத்தரிக்காயை அப்புறப்படுத்தினர்.

இரண்டாம் உலகப்போரில் தீவிரப் பங்கேற்ற ஜெர்மனியில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அங்கு அடிக்கடி கண்டெடுக்கப்படுவது வழக்கம்தான். அந்த எண்ணத்தில்தான் இப்படியொரு பீதியைக் கிளப்பிவிட்டார் அந்தத் தாத்தா.

பிடிக்காத யாரோ வீசியெறிந்து விட்டுப் போன கத்தரிக்காயால் இவ்வளவு அக்கப்போரா? 

Next Story