‘ஒட்டுக்கேட்கும்’ ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போனில் பேசும் பேச்சும் ஒட்டுக்கேட்கப்படுவதாக புதிய பரபரப்புக் கிளம்பியிருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் போன்ற நவீன மொபைல்சாதனங்கள் மூலம் ஒருவர் உள்ளடும் விஷயங்கள் மூலம் அவர் கண்காணிக்கப்படுவதாக ஏற்கனவே சர்ச்சைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போனில் பேசும் பேச்சும் ஒட்டுக்கேட்கப்படுவதாக புதிய பரபரப்புக் கிளம்பியிருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் அதில் உள்ள மைக்ரோபோன்கள் மூலம் நமது உரை யாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் வாயிலாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் அதை பேஸ்புக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
பேஸ்புக்கின் விளம்பரங்கள் பிரிவின் துணைத் தலைவரான ராப் கோல்டுமேன், தங்கள் நிறுவனம் இதுபோன்ற வழிமுறைகளை மேற்கொண்டதே இல்லை என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால், சிலர் தங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றவர்களுடனான தமது உரையாடலை ஒட்டுக்கேட்டதன் மூலம், தமக்குத் தொடர்புடைய விளம்பரங்களை அளித்ததாக தமது அனுபவங்களைக் கூறுகின்றனர்.
‘நானும் என் வருங்கால மனைவியும் யாருக்கும் கூறாமல் நடத்திய நிச்சயதார்த்தத்தைப் பற்றி மற்றவர் களுக்குக் கூறுவதற்கு முன்பே, திருமணம் சார்ந்த விளம்பரங்களை எங்கள் ஸ்மார்ட்போன்களில் பார்த்தோம்’ என்கிறார், அமெரிக்காவின் ஸ்பிரிங்பீல்டு பகுதியைச் சேர்ந்த நாட்.
மற்றொரு அமெரிக்கரான ஜான், “கடந்த ஆண்டில் என்னுடைய வலது காதின் கேட்கும் திறனை இழந்தேன். அப்போது, ஐபோன்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செவிப்புலன் உதவி சாதனம் எனக்கு அளிக்கப்பட்டது. அதாவது இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி என்னால் மற்றவர்களை மொபைல் மூலம் தொடர்புகொள்ளவும், பாட்டு கேட்பது உள்ளிட்டவற்றைச் செய்யவும் முடியும்” என்று கூறும் அவர்,
“ஒவ்வொரு முறையும் என்னுடைய செவிப்புலன் உதவி சாதனம், ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது ஒருவித ‘கிளிக்’ ஒலி கேட்கும். என்னைச் சுற்றியுள்ள உலகை நான் நேரிடையாகக் கேட்பதிலிருந்து அச்சாதனம் வழியாக கேட்கும் வகையில் மாற்றுவதால் அந்த ஒலி கேட்கிறது. ஸ்மார்ட் போனில் உள்ள மைக்ரோபோனால் அது தலைகீழாகவும் நடந்தது. செயலிகளுக்கான ஒலி அனுமதியை நான் அணைத்து வைத்திருந்தபோதும்கூட பேஸ்புக்கின் பிரதான செயலி மற்றும் மெசஞ்சர் செயலி ஆகிய இரண்டிலுமே அந்த கிளிக் ஒலியை பல நேரங்களில் கேட்டிருக்கிறேன்” என்கிறார்.
லின்கனைச் சேர்ந்த லிண்ட்சே என்பவர், “சமீபத்தில்தான் நான் என்னுடைய வேலையை விட்டேன். நண்பர் ஒருவருடன், அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, எனக்கு காபி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒருவேளை நான் குறிப்பிட்ட காபி ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தால் நிறைய காபி குடிக்க முடியும் என்று கூறினேன். அதற்கடுத்த முறை நான் என் ஸ்மார்ட்போனில் பேஸ்புக்கை திறந்தபோது, அந்த காபி ஷாப் நிறுவனம் புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை லண்டனில் நடத்துவதாக விளம்பரம் வெளியாகியிருந்தது” என்கிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெலிசா தனது அனுபவத்தைக் கூறுகிறார்...
“தனது வீட்டில் கண்காணிப்புக் காமிராவை அமைத்துக்கொண்டிருந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய எதையும் நான் இணையத்தில் தேடியதே கிடையாது. ஆனால் நண்பருடன், சுமார் அரைமணி நேரத்துக்கும் குறைவாக, கண்காணிப்புக் காமிராவை நிறுவுவது பற்றிப் பேசினேன். அதன்பின், வீட்டு பாதுகாப்புச் சாதனங்கள் பற்றிய விளம்பரம் என்னுடைய பேஸ்புக்கில் வந்துவிட்டது. நண்பருடனான உரையாடலின் முழு நேரமும் செல்போன் என் சட்டைப் பாக்கெட்டில்தான் இருந்தது” என்கிறார்.
இந்தச் சம்பவங்கள் எல்லாம், ஆங்கிலத்தில் பேசு பவர்களின் உரையாடல்கள் வாயிலாக தரவுகளைத் திரட்டி அதன் மூலம் தகுந்த விளம்பரங்கள் வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள்.
தற்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், எந்த மொழியிலான உரையாடலும் ஒட்டுக்கேட்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாக ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், ஸ்மார்ட்போனிலேயே விழித்து ஸ்மார்ட்போனிலேயே நித்திரைக்குச் செல்லும் இளைய தலைமுறையினர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கண்ணுக்குத் தெரியாத ஓர் உலகம் நம்மை எப்போதும் கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து நடந்துகொண்டால் போதும்!
Related Tags :
Next Story