நெல்லையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 220 பேர்களுக்கு ரூ.2¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
நெல்லையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 220 பேர்களுக்கு ரூ.2¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நெல்லை,
நெல்லையில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் 220 பேர்களுக்கு ரூ.2¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
கூட்டுறவு வார விழாநெல்லை கொக்கிரகுளத்தில் 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி வரவேற்று பேசினார். துணைபதிவாளர் பத்மநாபன் கூட்டுறவு உறுதி மொழி வாசித்தார். அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் 220 பேர்களுக்கு ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே, பாளையங்கோட்டையில் உள்ள அம்மா மருந்தகம் சிறந்த மருந்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அம்மா மருந்தகத்தில் மற்ற மருந்தகத்தை விட 15 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற வார்த்தைக்கு இணங்க கூட்டுறவு சங்கங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் நடத்திட ஒத்துழைத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசியதாவது:–
ரூ.173 கோடி பயிர் கடன்கூட்டுறவு என்பது 150 வருடத்திற்கு முன்பே தோன்றி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவில் சிறப்பாக செயல்பட்டு பல குழுக்கள் இந்திய அளவில் இடம் பிடித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 2016–2017ம் ஆண்டிற்கு ரூ.173 கோடி பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, 9 ஆயிரத்து 63 விவசாயிகளுக்கு ரூ.85 கோடியே 28 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. 2017–2018ம் ஆண்டிற்கு ரூ.200 கோடி பயிர் கடன் வழங்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, 31.10.2017 வரை 9 ஆயிரத்து 965 விவசாயிகளுக்கு ரூ.77 கோடியே 88 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிளைகள் மூலமாக 64 பேர்களுக்கு ரூ.60 லட்சத்து 88 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு நகர வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் இதுவரை 439 குழுக்களுக்கு ரூ.10 கோடியே 74 லட்சமும், நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் 206 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.49 லட்சத்து 40 ஆயிரமும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இ–சேவை மையம்விவசாயிகளுக்கு பயிர் கடனுதவிகள் வழங்குவதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முன்னிலையில் உள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேலை செய்யும் 121 பெண்களுக்கு ரூ.1 கோடியே 51 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 21–ம் நூற்றாண்டில் கூட்டுறவு சங்கங்கள் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இ–சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது அதன் மூலம் அனைத்து விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் அனைவரும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தங்களுக்கு தேவையான கடனுதவிகளை பெற்று, கூட்டுறவு சங்கங்களை மென்மேலும் வளர்ச்சியடைய செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், இன்பதுரை, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் தச்சை கணேசராஜா, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ, தமிழ்நாடு சிறுபான்மையினர் கல்வி மானியக்குழு உறுப்பினர் காபிரியேல் ஜெபராஜன், மாவட்ட கூட்டுறவு வேளாண்மை பொறியியல் சேவை மைய தலைவர் மகபூப்ஜான், நெல்லை சூப்பர்மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெசவாளர் கூட்டுறவு இணையதலைவர் ஆறுமுகம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் ரமேஷ், பாளையங்கோட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் (பொறுப்பு) சுதாபரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.