தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு


தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 19 Nov 2017 4:00 AM IST (Updated: 19 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள கீழ 3-ம் வீதி மற்றும் வடக்கு 3-ம் வீதியில் நகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், சாக்கடைகளில் மருந்து அடித்தல், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தல், தனிநபர் வீடுகளுக்கு சென்று டெங்குகொசு உருவாகும் காரணிகளை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பல்வேறு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

அப்போது அவர் கூறியதாவது:- நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேலைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் மட்டை, டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தொடர்ந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்குகொசு உருவாகும் காரணிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பொதுமக்கள் தங்களது இல்லங்களில் குடிநீர்த்தொட்டி, சுத்தமான தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வீட்டில் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து உரிய விழிப்புணர்வை பொதுமக்கள் பெற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து காமராஜபுரம் அரசு ஆரம்ப நகர்புற சுகாதார நல மையத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் கே.எம்.சரயு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி, சுகாதார ஆய்வாளர்கள் பரக்கத்துல்லா உள்பட நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர். 

Next Story