விவசாயியை வழிமறித்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


விவசாயியை வழிமறித்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:30 AM IST (Updated: 19 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியை வழிமறித்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொத்தமங்கலம் கடைவீதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கொடியரசன் (வயது 50). விவசாயி.இவரது மகனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி இரவு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தன் மகனுக்கு மாற்று உடை எடுப்பதற்காக கொடியரசனும் அவரது மாமனார் கணேசனும் ஒரு மோட்டார் சைக்கிளில் கொத்தமங்கலம் நோக்கி சென்ற போது பள்ளத்திவிடுதி பாலம் அருகே அதே ஊரைச் சேர்ந்த சீரங்கம் மகன் பாரதி (30) மற்றும் இன்னொரு நபரும் வழிமறித்துள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு கடையில் பாதுகாப்புக்காக ஒதுங்கியவர்களை கொடூரமாக தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து வடகாடு போலீஸ் நிலையத்தில் கொடியரசன் உடனடியாக புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கொத்தமங்கலம் கடைவீதியில் திடீரென திரண்ட பொதுமக்கள் கொடியரசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வடகாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் அதி காரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தொடர்ந்து ஆலங்குடி தாசில்தார் ராஜேஸ்வரியும் மறியல் நடந்த இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொத்தமங்கலம் பகுதியில் இருந்து செல்லும் நபர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தி வழிப்பறி நடப்பது தொடர்கிறது. அதனால் பஸ் போக்குவரத்தை வடகாடு வழியாக திருப்பிவிட வேண்டும் என்றும், கொடியரசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் வழிமறித்து தாக்கிய பாரதியை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகே பொதுமக்கள் தங்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story