உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 19 Nov 2017 5:57 AM GMT (Updated: 19 Nov 2017 5:57 AM GMT)

அவள் கிராமப் பகுதியை சேர்ந்தவள். வயது 24. விவசாய குடும்பம். நகரத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் பயின்ற சீனியர் மாணவனை காதலித்தாள்.

வள் கிராமப் பகுதியை சேர்ந்தவள். வயது 24. விவசாய குடும்பம். நகரத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் பயின்ற சீனியர் மாணவனை காதலித்தாள். அந்த மாணவன் விளையாட்டில் சாதனை படைத்துக்கொண்டிருந்தவன். அதனால் மாணவிகள் கூட்டம் அவனை எப்போதும் மொய்த்தபடி இருக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பு அவள் வீட்டிலே இருந்தாள். அவன் வேலை தேடிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவர்கள் காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

எப்படியோ முதலில் மகனது காதலை தாயார் கண்டுபிடித்துவிட்டார். அவனது செல்போனில் அவளுடன் சேர்ந்து எடுத்திருந்த படம் இருந்ததை பார்த்து விட்டார். மகனிடம், காதலை கைவிட்டு விடும்படி கூறினார்.

இந்த தகவல் பெண்ணிற்கு தெரிந்ததும், சோகமடைந்தாள். ‘திருமணம் என்று ஒன்று நடந்தால் அவருடன் மட்டுமே நடக்கும். அதனால் பையன் வீட்டாரிடம் பேசி, எப்படியாவது எங்கள் கல்யாணத்தை நடத்திவையுங்கள். இல்லாவிட்டால் விபரீத முடிவு எடுத்துவிடுவேன்’ என்று அவள் தனது தாயாரை மிரட்டினாள்.

தாயார், வேறுவழியில்லாமல் இளைஞனின் பெற்றோரிடம் சென்று சம்பந்தம் பேசினார். ‘அதிகமான அளவு நகை தருகிறேன். வரதட்சணையும், சீர்வரிசையும் நிறைய தருகிறேன். பையனுக்கு வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என் மகள் விரும்புகிறாள். அதனால் கல்யாணத்துக்கு சம்மதியுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் இளைஞனின் தாயாரோ, ‘என் மகன் விளையாட்டுத்தனமாக காதலித்திருப்பான். உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் உங்கள் மகளுக்கு வேறு வரனை பாருங்கள் ’ என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்.

அதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார், மகளுக்கு வேறு இடத்தில் வரன் பார்க்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு வரனை பேசி முடிக்கும் தருவாயில், பழைய காதலனின் மூத்த சகோதரி திடீரென்று பெண் வீட்டிற்கு வந்தாள். ‘என் அம்மா பேசியது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். என் தம்பி உங்கள் மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். அதனால் நாங்கள் இரண்டு நாட்களில் பெண் பார்க்க வருவோம். அன்றே நிச்சயதார்த்தம் செய்துவிடலாம். 15, 20 நாட்களில் திருமணத்தையும் முடித்துவிடலாம். ஏன்என்றால் தம்பிக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது. திருமணம் முடிந்ததும் அவன் வெளிநாடு சென்று விடுவான்’ என்றாள்.

அந்த பெண்ணின் பேச்சும், திருமணத்தில் அவர்கள் காட்டும் அவசரமும் பெண் வீட்டாரை யோசிக்க வைத்தது. அதனால் அவன் எந்த நாட்டிற்கு வேலைக்கு செல்லப் போகிறான்? யார் மூலம் ஏற்பாடு நடக்கிறது என்று விசாரித்தார்கள். அப்போது தான் அவர்களுக்கு அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

அவன் வெளிநாடு செல்ல பெருமளவு பணம் தேவைப்பட்டிருக்கிறது. அவனை நம்பி சொந்தபந்தங்கள் யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. அந்த நேரத்தில் சமயோசிதமாக சிந்தித்த அந்த இளைஞன், ‘அவளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தாலும் அவள் என் மீது தீராத காதலுடன் இருந்து கொண்டிருக்கிறாள். அதனால் அவளை பெண் பார்க்க சென்று, பேசி முடித்து, அவசரமாக திருமணத்தை நடத்தி வையுங்கள். அவளது தாயார் அதிகமான அளவு நகைகள் தருவதாக சொன்னார். திருமணம் முடிந்ததும் அந்த நகைகள் அனைத்தையும் விற்று, நான் பணமாக்கி, அதை பயன்படுத்தி வெளிநாடு செல்கிறேன்’ என்று தனது சகோதரியிடம் கூறியிருக்கிறான். அதனால்தான் அவள் அவ்வளவு வேகத்தில் சம்பந்தம் பேச சென்றிருக்கிறாள்!

இந்த உண்மை தெரிந்ததும், ‘இவ்வளவு மோசமான எண்ணம் கொண்ட ஒருவனை விழுந்து விழுந்து காதலித்திருக்கிறேனே" என்று நொந்து போன பெண், அவனை போனில் தொடர்பு கொண்டு, ‘உன்னை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. நீ வெளிநாட்டு பணத்தேவைக்காக வேறு எந்த பெண்ணையாவது ஏமாற்றி திருமணம் செய்தாலும் உன்னை நான் போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறாள்! இதெப்படி இருக்கு!!

-உஷாரு வரும்!

Next Story