ரசிப்பு... ஈர்ப்பு... கிளர்ச்சி - இளசுகளை இழுக்கும் ‘வெப் சீரிஸ்’


ரசிப்பு... ஈர்ப்பு... கிளர்ச்சி - இளசுகளை இழுக்கும் ‘வெப் சீரிஸ்’
x
தினத்தந்தி 19 Nov 2017 11:31 AM IST (Updated: 19 Nov 2017 11:31 AM IST)
t-max-icont-min-icon

‘வெப் சீரிஸ்’ இப்போதைய நவீனயுகத்தின் புதுமையான பொழுதுபோக்கு. டி.வி. தொடர் போல அல்லாமல், இணையதளங்களில் குறுந்தொடராக வெளிவரும் இவை

‘வெப் சீரிஸ்’ இப்போதைய நவீனயுகத்தின் புதுமையான பொழுதுபோக்கு. டி.வி. தொடர் போல அல்லாமல், இணையதளங்களில் குறுந்தொடராக வெளிவரும் இவை, பல உண்மைச் சம்பவங்களையும், உணர்ச்சிகரமான விஷயங்களையும் அலசி மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. வெப் தொடர்களின் வசீகரம் பற்றி கொஞ்சம் விரிவாக அலசுவோம்!

மக்கள் ஆரம்பத்தில் சினிமா படத்தைப் பார்த்து ரசித்து பொழுதுபோக்கினார்கள். வீட்டிற்கே வந்துவிட்ட டி.வி.கள், அவர்களுக்கு சீரியல்கள் எனப்படும் தொடர்களை அறிமுகம் செய்து மகிழ வைத்தது. நீண்டகாலம் நீடித்த தொடர்களும், இல்லத்தரசிகளையே குறிவைத்த கதையமைப்புகளும் ஆண்களுக்கும், சில பெண்களுக்கும் சலிப்பைத் தந்தன. அதுபோன்றவர்களுக்கு ‘ரியாலிட்டி ஷோ’ என்று பிரபலங்களின் வாழ்வின் உண்மை முகங்களைக் காட்டி குஷிப்படுத்தினார்கள். உண்மையின் பிரதிபலிப்பாக வரவேண்டிய அதுபோன்ற நிகழ்ச்சிகளிலும் சுவாரசியத்திற்காக கதையமைப்பு போன்ற சித்தரிப்புகள் தெரிவதால் புதியதைத் தேடும் மனநிலைக்கு தள்ளப்பட்டனர் இளசுகள்.

குட்டைகளுக்குள்ளே சுற்றிவரும் மீனாக பார்த்த காட்சி களையே பார்த்து சலித்துப்போன அவர்களுக்கு, காட்சிக்கடலாக புதுமைகளை அறிமுகம் செய்கிறது இணையதளங்கள். அவர்களுக்கு இப்போதைய விருப்பமான விஷயமாக உருவெடுத்திருக்கிறது ‘வெப் சீரிஸ்’. 15 முதல் 45 நிமிடம் வரை நீடிக்கும் இந்த இணைய தொடர்கள் சுவாரசியமாகவும், சலிப்புத் தட்டாமலும் இருக்கின்றன.

‘சீரியல்’ என்ற பெயரில் வீட்டுப் பிரச்சினைகளை மெகா தொடராக எடுத்து ஓடவிட்டு லாபம் சம்பாதிப்பவர்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது இந்த வெப்சீரியல்கள். மக்கள் பார்வை எந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குகின்றன, ‘வெப்’ தொடர்கள். நிறைய பேர் காதில் ‘இயர் போன்’ வைத்துக்கொண்டு எங்கு போனாலும் செல்போனை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். அவர்கள் நிச்சயம் இணையதளத்தில் வீடியோ காட்சிகளைத்தான் ரசித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நித்தமும் புதுமையாக எதையாவது ரசிக்க முடியுமா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுப்புது தலைப்புகளில், வித்தியாசமான கருத்துகளுடன் வெப் சீரியல்கள் வெளியாகி அவர்களைத் திருப்திப்படுத்துவதால், வெப் சீரிஸ் ரசிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது.

டி.வி. சீரியல்களுக்கும், வெப்சீரிஸ்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஏதேனும் ஒரு தனிப்பட்ட விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் வீடியோ அல்லது சிறு தொடர் வீடியோ காட்சிகள்தான் ‘வெப் சீரிஸ்’. அதிகபட்சம் ஒரு வெப் சீரிஸ் தொடரை 6 வாரத்தில் முடித்துவிடுவார்கள். நிறைய அப்ளி கேசன்களில் முந்தைய நிகழ்வுகளையும் ரசிக்க முடியும். வரப்போகும் நிகழ்வு குறித்த தகவலும் இடம் பெறும். எனவே டி.வி. சீரியல்போல ஆரம்பம், முடிவு தெரியாமல் ஒரு கதையை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. வெப் சீரிஸ்களில் தீவிரமான ஏதாவதொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய கதை சொல்லப்படுகிறது. தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், அறிந்த விஷயங்கள், அறியாத விஷயங்கள் புதுமையாக சொல்லப்படுகிறது.

இன்று தொலைக்காட்சியில் இளைஞர்களுக்கான விஷயங்கள் மிகக்குறைவு. அவர்களுக்கு வெப் சீரிஸ் மிகப்பெரிய ஆறுதலாக அமைகிறது. அன்றாட அலுவல்களில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வித்தியாசமான பொழுதுபோக்காகவும் இருக்கிறது.

சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொல்லும் சீரியல் போல் இல்லாமல் புதுப்புது விஷயங்களைப் பற்றி வெப் சீரிஸ்கள் பேசுகின்றன. ஒவ்வொரு சீரியலும் போதுமான இடைவெளியுடன் வருவதால் பார்ப்பவர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அடுத்து எதைப் பற்றி சொல்ல வருகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்படும் நிகழ்ச்சி இது. இடை இடையே விளம்பரங்கள் வராது. 3ஜி, 4ஜி எல்லாம் வந்துவிட்டபிறகு, ஸ்மார்ட் போன் மூலமாக இது போன்ற ‘சீரிஸ்’களை பார்த்து ரசிக்கிறார்கள். இது ஒரு வழி நிகழ்ச்சியல்ல. பார்ப்பவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம். எது பிடிக்கவில்லை, எது நன்றாக இருந்தது என்பதை தெளிவுபடுத்தலாம். நிகழ்ச்சிகளை தரமாக தயாரிக்க இது உதவுகிறது.

வெப் சீரிஸ்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஒருவர் எங்கு சென்றாலும், எப்போது வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம் என்பதே. இதற்கென்று தனி நேரம் கிடையாது என்பதால் முக்கியமான வேலைகளை கெடுத்துக் கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை. மற்றொரு சிறப்பாக வெப் சீரிஸ்கள் இணையதள இணைப்பின்றி ஆப்லைனிலும் பார்த்து ரசிக்கக்கூடியதாக உள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாவிட்டாலும் பார்க்க முடிவதால், திடீரென இணைய டேட்டா தீர்ந்துபோனாலும் கவலைப்படத் தேவையில்லை. செல்போன் மட்டுமல்லாமல் லேப்டாப், டேப்லெட்கள் வழியாகவும் பார்த்து ரசிக்கலாம். இதற்கான அப்ளிகேசன்கள் (ஆப்) இருந்துவிட்டால் போதும்.

இது தவிர யூ-டியூப், பிரத்யேக இணைய பக்கங்களிலும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அப்ளிகேசன் மூலமாக பார்ப்பதால் கிடைக்கும் மற்றொரு லாபம் என்னவென்றால், அடுத்து வரப்போகும் புதிய ‘சீரிஸ்’களைப் பற்றிய தகவல் கிடைக்கும். ஏற்கனவே வெளி வந்திருக்கும் சீரிஸ்களைப் பற்றிய விவரமும் கிடைக்கும்.

சென்சார் போர்டின் தலையீடு கிடையாது. தயாரிப்பாளர்கள், சென்சார் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பின் முழுமையான விஷயம் சிதைக்கப்படாமல் கிடைக்கும். இது தயாரிப்பின் நோக்கத்தையும், உன்னதத்தையும் உணர்ந்துகொள்ள வைப்பதோடு, சிறந்த தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

இப்படி பலவித சிறப்புகளால், வேகமாக பரவி வரும் வெப் சீரிஸ் தாக்கத்தால், பிரபலங்களும் இதில் இணையத் தொடங்கி இருக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வெப் சீரிஸ்களில் நடிக்க விரும்புகிறார்கள். சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல், பெரிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்திருக்கிறார்கள். திரைப்பட இயக்குனர்கள்கூட இந்த தயாரிப்பில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அனுராக் கஷ்யப் தன்னுடைய ‘கேங்ஸ் ஆப் வசய்பூர்’ படத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து ‘வெப் சீரிஸுக்கு’ அளித்திருக்கிறார். டர்ட்டி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஒரு வெப் சீரிஸ் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமல்ல `டெலிவிஷன் குயின்’ என்று அழைக்கப்படும் இவர், பல பிரபல நட்சத்திரங்களை இதில் புகுத்தி இருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘யஷ்ராஜ் பிலிம்ஸ்’ ஒரு வெப் சீரிஸ் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

வெப் சீரிஸ் அதிக சிரமமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நல்ல கருத்தை மையமாக வைத்து சொந்த கற்பனைத் திறனைப் புகுத்தி எளிமையாக எடுக்கப்படும் ‘வெப் சீரிஸ்’கள் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. மக்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய நிகழ்வாக மாறிக் கொண்டிருக்கிறது. வெளியே எங்காவது வெகுநேரம் தனிமையில் இருக்க நேர்ந்தால் கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் போதும், வெப் சீரிஸ் பார்த்து மகிழலாம்.

சுமித் ஒரு எழுத்தாளர். இவர் எழுதி, இவரே நடித்துள்ள ‘பர்மனென்ட் ரூம்மெட்’ வெப்தொடர் மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் சுமித். அவர் வெப் சீரிஸ் துறையில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். அதிக லாபமும் ஈட்டி வருகிறார்.

புதிய, வித்தியாசமான சிந்தனை உங்களிடம் இருக்குமானால் அதிக பொருட்செலவில்லாமல் நல்ல வெப் சீரிஸை தயாரித்து வெளியிடலாம். பெரிய நட்சத்திரங்கள், செட்டிங்ஸ் எதுவும் தேவையில்லை. இப்படி புதுமை படைக்கும் வெப் சீரிஸ்கள், வேகமாக பரவி வருவதுடன், தனது வீச்சின் தாக்கத்திற்கேற்ப கிளர்ச்சிகளையும், அதிர்வலைகளையும் உருவாக்கிக் கொண்டே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது! 

Next Story