மதுரை அருகே தொழில் அதிபர் அடித்துக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு
மதுரை அருகே தொழில் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள ஆலாத்தூரை சேர்ந்தவர் பிச்சை(வயது 50). தொழில் அதிபர். நேற்றுமுன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 3 பேர் அங்கு வந்தனர். பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கும், பிச்சைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பிச்சையை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிச்சை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊமச்சிக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்தநிலையில் பிச்சையின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி ஆலாத்தூர் கிராமமக்கள் நேற்று கடச்சனேந்தல்–ஊமச்சிகுளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். கொலை சம்பவம் காரணமாக ஆலாத்தூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.