உடுமலையில் சாலை விரிவாக்கத்துக்காக நகராட்சி குடியிருப்பு கட்டிடம் இடிப்பு


உடுமலையில் சாலை விரிவாக்கத்துக்காக நகராட்சி குடியிருப்பு கட்டிடம் இடிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2017 10:45 PM GMT (Updated: 19 Nov 2017 9:53 PM GMT)

உடுமலையில் சாலை விரிவாக்கப்பணிக்காக நகராட்சியின் பணியாளர் குடியிருப்பு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

உடுமலை,

உடுமலையில் தளி சாலை -சுப்பையா வீதி சந்திப்பில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் பலர் வந்துசெல்கிறார்கள். இதன் காரணமாக தற்போது உள்ள அலுவலக கட்டிடத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிதாக பிரமாண்டமான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிட பணிகள் விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கு சுப்பையா வீதியில் பிரதான நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் பாபுகான் வீதியில் இருந்து தளி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதி வரை இடையில் உள்ள சுப்பையா வீதி சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

நகராட்சி குடியிருப்பு இடிப்பு

இந்த சாலை விரிவாக்கப்பணிக்காக அந்த பகுதியில் உள்ள நகராட்சி பணியாளர் குடியிருப்பை (ஒரு வீடு) இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

இந்த பணி நகராட்சி ஆணையாளர் (கூடுதல் பொறுப்பு) கே.சரவணக்குமார் முன்னிலையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரால் நடத்தப்பட்டது. இந்த குடியிருப்பில் வசித்து வந்த நகராட்சி சுகாதார பணியாளருக்கு (மேஸ்திரி) மாற்று குடியிருப்பு ஒதுக்கி வழங்கப்பட்டது. மேலும் சாலை விரிவாக்கத்துக்காக அந்த பகுதியில் இருந்த நகராட்சியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு புதிய சுற்றுச்சுவர் நகராட்சி அலுவலக வளாகத்தின் உள்புறம் தள்ளிக்கட்டப்பட உள்ளது. 

Next Story