தகனம் செய்யும் தொழிலாளர்கள் இல்லாததால் உடல்களுடன் மயானத்தில் உறவினர்கள் காத்திருப்பு


தகனம் செய்யும் தொழிலாளர்கள் இல்லாததால் உடல்களுடன் மயானத்தில் உறவினர்கள் காத்திருப்பு
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தகனம் செய்யும் தொழிலாளர்கள் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களுடன் மயானத்தில் உறவினர்கள் 2 மணி நேரம் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

கும்பகோணம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் வசந்தா(வயது66) மற்றும் சண்முகா நகரை சேர்ந்த அனுசியா(50) ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் இறந்தனர். அவர்களின் உறவினர்கள் உடல்களை தகனம் செய்ய மேலக்காவிரியில் உள்ள மயானத்தை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்களிடம் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் கொடுத்து விறகு உள்ளிட்ட பொருட்கள் வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். பின்னர் நேற்று மதியம் 12.30 மணியளவில் வசந்தா உடலையும், மதியம் 1.30 மணியளவில் அனுசியா உடலையும் மயானத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் மயானத்தில் தகனம் செய்யும் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உடல் களைஅங்கேயே இறக்கி வைத்துவிட்டு சுமார் 2 மணி நேரமாக உறவினர்கள் காத்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது வரட்டி வாங்கி வருகிறேன் என்று சென்றவர் திரும்பி வரவில்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், ஒப்பந்தகாரரிடம் கேட்டனர். உடனடியாக அவர் மினி லாரியில் விறகுகளை மயானத்தில் அனுப்பி வைத்தார். அந்த விறகும் ஈரமாக இருந்ததால், வரட்டி இருந்தால் தான் தகனம் செய்ய முடியும் என்று மயான ஊழியர்கள் கூறினர். பின்னர் உறவினர்கள், வேறு வழியில்லாமல் உறவினர்கள் மூலம் வரட்டியை வாங்கி வந்து உடல்களை தகனம் செய்தனர். இந்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி கூறுகையில், மேலக்காவிரியில் உள்ள பெருமாண்டி மயானத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது. இறந்தவரின் உடலை 2 மணி நேரமாக காத்திருக்க வைத்தது தவறானது. இனிமேல் இது போல் நடக்காதவாறு பார்த்து கொள்ள உத்தரவிட்டுள்ளேன். மேலும் இது போல் நடந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story