அரக்கோணம் அருகே பானிபூரி சாப்பிட்டவர்கள் கோஷ்டி மோதல் மோட்டார்சைக்கிள்கள் எரிப்பு


அரக்கோணம் அருகே பானிபூரி சாப்பிட்டவர்கள் கோஷ்டி மோதல் மோட்டார்சைக்கிள்கள் எரிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2017 4:15 AM IST (Updated: 21 Nov 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே பானிபூரி சாப்பிட்டவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியதில் 2 மோட்டார்சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் வேன், லாரி ஆகியவற்றையும் சேதப்படுத்த கும்பல் முயன்ற சம்பவத்தை தொடர்ந்து 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம்,

அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் பானிபூரி கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு 3 பேர் பானிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலருக்கும், இவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் அவர்கள் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

இந்த மோதலை தொடர்ந்து அங்கிருந்த 2 மோட்டார்சைக்கிள்களை மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர். அதே நேரத்தில் பள்ளிக்கு முட்டை ஏற்றிச்சென்ற வேன், காய்கறி ஏற்றிச்சென்ற லாரி ஆகியவற்றையும் மறித்து சேதப்படுத்த சிலர் முயன்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை தலைமையில் அங்கு விரைந்தனர். அவர்களை பார்த்ததும் மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து முட்டை வேன் மற்றும் காய்கறி லாரியை மீட்டு போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், வளர்புரம் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் நேற்று காலை அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாசில்தார் வேணுகோபால் ஆகியோர் வளர்புரம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தகராறு காரணமாக வளர்புரம் கிராமத்தில் இருதரப்பை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது ஆலோசனையின்பேரில் இருதரப்பினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வளர்புரம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story