மாநில சுயாட்சி அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி


மாநில சுயாட்சி அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2017 4:30 AM IST (Updated: 21 Nov 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

மாநில சுயாட்சி அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

தூத்துக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை விழாவில் அரசு விதிகளுக்கு உட்பட்டு சென்ற வாகனங்களில் சுமார் 1000 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த விழாவின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கூட்டத்தை குறைப்பதற்காகவும் அரசும், அதிகாரிகளும் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. எனவே உடனடியாக எந்தவித நிபந்தனையும் இன்றி வாகனங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

வருமானவரி சோதனை என்பது அவர்களின் தனிப்பட்ட நடைமுறை. அதனை தடுக்க யாருக்கும் அனுமதியோ, உரிமையோ கிடையாது. ஆனால் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசு, அவர் மறைவுக்கு பிறகு வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது. சுமார் 6 மாதங்களுக்கு மேலாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தருணத்தில், திடீரென அங்கு சென்று ஜெயலலிதா அறையை திறந்து ஆய்வு செய்வது என்பது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

கோவையில் கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்தியது, ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிரானது. மாநில சுயாட்சி அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. இதற்கு மாநில அரசும் துணை போகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

தமிழக மீனவர்கள் காலம், காலமாக தாக்கப்படும் கொடுமை நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை இலங்கை ராணுவம் தாக்கியது என்று கூறி மத்திய அரசு தப்பித்துக்கொண்டு இருந்தது. தற்போது இந்திய ராணுவமே சுடக்கூடிய நிலை உள்ளது. தொடர்ந்து மீனவர்கள் வஞ்சிக்கப்படக்கூடிய நிலையில், மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக உள்ள ஜெயக்குமார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது புரியவில்லை. மத்திய அரசு, தமிழக மீனவர்களை பழிவாங்குவதிலே குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் வடக்கு இலந்தை குளத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறக்க அனுமதிக்க வேண்டும், கோணார்கோட்டையில் திருமண மண்டபத்தை திறக்க அனுமதிக்க வேண்டும். தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தார். 

Next Story