ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் சரமாரி வெட்டிக்கொலை கோர்ட்டில் கையெழுத்திட வந்தபோது நடந்த பயங்கரம்


ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்கள் சரமாரி வெட்டிக்கொலை கோர்ட்டில் கையெழுத்திட வந்தபோது நடந்த பயங்கரம்
x
தினத்தந்தி 20 Nov 2017 11:15 PM GMT (Updated: 20 Nov 2017 10:03 PM GMT)

தூத்துக்குடி அருகே கோர்ட்டில் கையெழுத்திட வந்த 2 வாலிபர்கள் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 42). இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது முனியசாமியின் மனைவி மஞ்சுளாவும், அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பாக்கியலட்சுமியும் போட்டியிட்டனர். அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் இருதரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 23.1.2017 அன்று முனியசாமி தனது நண்பரான தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த முத்துகுமாரிடம்(35) அங்குள்ள ஒர்க்‌ஷாப்பில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ராமச்சந்திரன் தலைமையில் வந்த 21 பேர் கொண்ட கும்பல், முனியசாமியையும், முத்துகுமாரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் அதே பகுதியை சேர்ந்த விசுவநாத் ராம்குமார்(27), முத்துச்செல்வம், மாரிமுத்து(23), கவியரசன்(30), கொடிகாட்டு ராஜா(24), கணேசன்(33) ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்து தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் ஓட்டப்பிடாரத்தில் இருந்து கையெழுத்து போடுவதற்காக காரில் புறப்பட்டனர். கவியரசன் தூத்துக்குடியில் இருப்பதால், அவர் அங்கிருந்து கோர்ட்டுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் வசந்தகுமார் என்பவரும் உடன் வந்தாராம். காரை கணேசன் ஓட்டினார்.

புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே எதிரே வந்த ஒரு லாரி கார் மீது மோதியது. காரில் இருந்து அவர்கள் இறங்கி, தப்பி ஓடிய போது மற்றொரு காரில் வந்த ஒரு கும்பல் கணேசன், கொடிகாட்டு ராஜா ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்துக்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர். தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட கணேசனுக்கு, பார்வதி என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

Next Story