குப்பை கிடங்கை அகற்றக்கோரி 8-வது நாளாக மக்கள் போராட்டம்


குப்பை கிடங்கை அகற்றக்கோரி 8-வது நாளாக மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2017 2:34 PM IST (Updated: 21 Nov 2017 2:34 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று 8-வது நாளாக போராட்டம் நடத்தினர். அப்போது வாயில் கருப்பு துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்காக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. இந்த குப்பை கிடங்கால் அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை உருவாகி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதுபோக கடந்த சில ஆண்டுகளாக தேவகோட்டை நகராட்சியில் சேரும் குப்பைகளும் இங்கேயே கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் மேலும் சுகாதார சீர்கேடு நிலவி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இதற்கிடையில் காரைக்குடி நகராட்சியில் அமைக்கப்படும் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கு அருகில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதியில் அமைக்க வலியுறுத்தியும் கடந்த 13-ந்தேதியில் இருந்து தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, போராட்ட களத்திலேயே சமையல் செய்து சாப்பிடுதல் என தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக நேற்று 8-வது நாளில் பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அங்கேயே சமையல் செய்து அவர்கள் சாப்பிட்டனர். இதில் தேவகோட்டை ரஸ்தா பகுதியை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கூறும்போது, குப்பை கிடங்கை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

Next Story