பாசன வாய்க்காலை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்


பாசன வாய்க்காலை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Nov 2017 3:34 PM IST (Updated: 21 Nov 2017 3:34 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய் நல்லூர் அருகே பாசன வாய்க்காலை சொந்த செலவில் விவசாயிகள் சீரமைத்தனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து சேமக்கோட்டை வரை ரெட்டி வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் மொத்தம் 40 கிலோ மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் டி.சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, மேல்தணியாலம்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆனத்தூர், சேமங்கலம், மணக்குப்பம், சேமக்கோட்டை வரை உள்ள 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இந்த பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த வாய்க்காலை தூர்வாரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிகாரிகளை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லாத நிலையில் தாங்களே வாய்க்காலை தூர்வாருவது என விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணியை தொடங்கினர்.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து இருவேல்பட்டு ஏரி வரை உள்ள 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் கிடந்த முட்புதர்கள், செடிகள், மண்மேடு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினர். ஆகவே தொடர்ந்து மீதமுள்ள இடங்களிலும் வாய்க்காலை தூர்வார இனிமேலாவது மாவட்ட கலெக்டர், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆகியோர் போதுமான நிதியை ஒதுக்கி பணிகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story