போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதியை விமர்சித்த வேலூர் பெண் கைது


போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதியை விமர்சித்த வேலூர் பெண் கைது
x
தினத்தந்தி 22 Nov 2017 4:45 AM IST (Updated: 22 Nov 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பற்றி முகநூலில் விமர்சனம் செய்த வேலூர் பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்,

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தை சட்டவிரோதமானதாக அறிவிக்கவேண்டும் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டு மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். அதேநேரத்தில் கல்விகட்டணம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து நீதிபதியை வேலூர் சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியை சேர்ந்த லாரி அதிபர் சிவகுமாரின் மனைவி மகாலட்சுமி (வயது 41) என்பவர் முகநூலில் விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கடந்த 21-9-2017 அன்று தெற்குபோலீஸ் நிலையத்தில் புகார்செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நீதிபதி குறித்து விமர்சனம் செய்த மகாலட்சுமியை நேற்று வேலூர் தெற்கு போலீசார் கைதுசெய்து வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் மகாலட்சுமியை போலீசார் வேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். 

Next Story