நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் மாவோயிஸ்டுகளின் புகைப்படத்தை வைத்து பஸ்களில் தேடுதல் வேட்டை


நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் மாவோயிஸ்டுகளின் புகைப்படத்தை வைத்து பஸ்களில் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வைத்து பஸ்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கேரள– கர்நாடகா மாநிலங்களின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், மஞ்சூர் தாலுகாக்களில் உள்ள வனப்பகுதி, முதுமலை புலிகள் காப்பக பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 1 வாரமாக ரோந்துப்பணி தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு நிலம்பூர் வனத்தில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டு கொன்றனர். இச்சம்பவம் நடைபெற்று 1 ஆண்டு ஆவதால் மாவோயிஸ்டுகள் பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கேரள, தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகா வனப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தர்மபுரி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக கூடலூர் பகுதியில் உச்ச கட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டுகளின் புகைப்படங்கள் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று கூடலூர் தொரப்பள்ளியில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களில் ஏறி திடீர் சோதனை நடத்தினர். அவர்கள், மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனைத்து பஸ்களிலும் ஏறி தீவிர கண்காணிப்பில் ஈடுபடடனர்.

பின்னர் தொரப்பள்ளி அருகே உள்ள இருவயல் ஆதிவாசி கிராமத்துக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சென்று ஆதிவாசி மக்களுக்கு பிஸ்கெட் உள்ளிட்ட திண்பண்டங்களை வழங்கினர். அப்போது சந்தேகப்படும்படி யாராவது வந்தால் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இல்லை. அது போல் யாரும் வந்தால் உடனடியாக தகவல் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து முதுமலை ஊராட்சி நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம் உள்ளிட்ட புலிகள் காப்பக வனத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு ரோந்து சென்றனர்.


Next Story