தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
‘தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கோவையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
கோவை,
கோவை–காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் மாநில அளவிலான 64–வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிறைவு நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்து பேசினார். விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:–
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற பணியை விவசாய பிரதிநிதியாக இருந்து செய்து கொண்டு வருகிறேன். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் தி.மு.க. அரசு. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சி குறித்து என்னென்னவோ தவறாக பேசுகிறார்.
அவர் ஒரே ஒரு குளத்தை தூர்வாரி விட்டால் அனைத்து குளத்திலும் நீர்மட்டம் ஏறுமா?. அ.தி.மு.க. அரசை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் ஊழலையே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர்.
தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சியில் தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த முறையும் அ.தி.மு.க. ஆட்சி தான் கண்டிப்பாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எங்களுக்கு கோவில் போன்றது. அங்கு வருமான வரித்துறை சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–
எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு புள்ளி விவரங்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்து வருகிறார். பள்ளிக்கூடங்களில் முட்டையே போடவில்லை என்று எதிர்க்கட்சிதலைவர் சொல்வது தவறு. பள்ளிகளில் சீரான முறையில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் எதை எதையோ பேசி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.